30% வழிகாட்டு மதிப்பு உயர்த்தி வசூல்.! பத்திர பதிவு செய்பவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பதிவுத்துறை

Published : Sep 25, 2025, 09:36 AM IST

Guideline value increase in TN : நிலம், வீட்டுமனைகளுக்கான வழிகாட்டி மதிப்பை விட 30% கூடுதலாக வசூலிக்கப்படுவதாக  ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். வாய்மொழி உத்தரவின் பேரில் சார்பதிவாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

PREV
14
பத்திர பதிவு - பொதுமக்களுக்கு ஷாக்

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதற்காக பல நாட்கள் கஷ்டப்பட்டு சிறுக, சிறுக சேமித்து நிலங்களை வாங்கி வருவார்கள். அந்த நிலங்களை வாங்கும் போது அதற்கான கட்டணம் பல லட்சங்களில் தாண்டும் போது பத்திர பதிவு செய்யவே அச்சப்படுகிறார்கள். இந்த நிலையில் வழிகாட்டு மதிப்பு தற்போது உள்ளதை விட கூடுதலாக 30% வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

 இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளுக்கான வழிகாட்டி மதிப்பினை நியாயமாக நிர்ணயிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க., அதனை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது ஏழையெளிய மக்களின் சொந்த வீடு வாங்கும் கனவை குழிதோண்டி புதைத்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

24
வழிகாட்டி மதிப்பு அதிகரிப்பு

கடந்த 52 மாத கால தி.மு.க. ஆட்சியில், நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்தியது; இந்த உயர்வுக்கு நீதிமன்றம் தடை விதித்தும் அதனை நடைமுறைப்படுத்தாதது; பேசிக், பிரீமியம், அல்ட்ரா பிரீமியம் என மூன்று வகைகளாக பிரித்து வழிகாட்டி மதிப்பினை நிர்ணயம் செய்தது; பின்னர் தெரு வாரியாக மதிப்பீடுகளை நிர்ணயம் செய்தது; அடுக்குமாடி கட்டடங்களில் பிரிபடா பாகத்திற்கு தனி பதிவு முறை, 

கட்டடங்களுக்கு தனி பதிவு முறை என்றிருந்ததை ஒரே பதிவாக மாற்றி கூட்டுப் பதிவுக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது என பல்வேறு கூடுதல் நிதிச் சுமைகள் மக்கள்மீது திணிக்கப்பட்டன. இதன் விளைவாக, 1000 சதுர அடிக்கு 5 இலட்சம் ரூபாய் என்றிருந்த பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் தற்போது இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்ந்துவிட்டது.

34
30% வழிகாட்டி மதிப்பு உயர்வு

இந்த நிலையில், நிலங்களின் சந்தை மதிப்பு உயர்ந்து வருவதை அடிப்படையாக வைத்தும், சிலர் வங்கி மூலம் கடன் பெறுவதற்காக கூடுதல் மதிப்பில் பத்திரங்கள் பதிவு செய்வதை அடிப்படையாக வைத்தும், வாய்மொழி உத்தரவின் அடிப்படையில், புதிதாக பத்திரப் பதிவு செய்பவர்களிடம் தற்போது உள்ள வழிகாட்டி மதிப்பினைவிட கூடுதலாக முப்பது சதவிகிதம் உயர்த்தி அதற்கு முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

பதிவுத் துறை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பைவிட கூடுதலாக வழிகாட்டி மதிப்பினை சார்பதிவாளர்கள் தெரிவிப்பது வீடு மற்றும் நிலம் வாங்குபவர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44
சட்டத்திற்கு புறம்பான செயல்

இதற்கு கடும் கண்டனத்திற்குரியது. எந்தவித எழுத்துப்பூர்வமான ஆணையினை அரசு வெளியிடாத நிலையில் இதுபோன்று கூடுதல் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பான செயல். முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, பதிவுத் துறை இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பிற்கேற்ப முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories