மாநில சட்டமன்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய காலக்கெடு குறித்து குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரிய நிலையில், முந்தைய தீர்ப்பை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய காலக்கெடு தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143-இன் கீழ் அனுப்பப்பட்ட ஆலோசனை மனுவை, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரித்தது.
அப்போது, இந்த வழக்கு ஒரு மேல்முறையீட்டு வழக்காகக் கருதப்படாது என்றும், ஆலோசனை வழங்குவது மட்டுமே உச்சநீதிமன்றத்தின் நோக்கம் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
24
விளக்கமளித்த உச்சநீதிமன்றம்
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, "இந்த வழக்கில் நாங்கள் ஆலோசகராக மட்டுமே செயல்படுகிறோம். தமிழக ஆளுநர் தொடர்பான தீர்ப்பை ரத்து செய்வதற்கான அதிகாரம் எங்களிடம் இல்லை. நாங்கள் சட்டத்தை மட்டுமே விளக்குவோம். ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பின் தகுதியை நாங்கள் மீண்டும் ஆய்வு செய்ய மாட்டோம்," என்று கூறினார்.
நீதிபதி சூர்ய காந்த் இதை மேலும் தெளிவுபடுத்தி, "ஆலோசனை அதிகார வரம்பின் கீழ், ஒரு முந்தைய தீர்ப்பு சரியான சட்டக் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கவில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், அதை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இது மேல்முறையீட்டு வழக்குகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது" என்று குறிப்பிட்டார்.
34
ஆளுநர் vs மாநில அரசு: வழக்கின் பின்னணி
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கின் எதிரொலியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றி நிறுத்தி வைக்கும் முடிவை எடுப்பது செல்லாது என்றும், ஆளுநர் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் செயல்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 2025-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என்பது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரினார்.
கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகள், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் அனுப்பிய ஆலோசனை மனுவின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்தன. இதற்குப் பதிலளித்த உச்சநீதிமன்றம், தற்போதைய விசாரணையின் நோக்கம், முந்தைய தீர்ப்பை ரத்து செய்வதல்ல, மாறாக சட்டரீதியான தெளிவைக் கொடுப்பது மட்டுமே என்று தெரிவித்தது.