Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணியின் போது, வடமாநிலத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.
தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வந்தது. பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இன்னும் பணிகள் முடிவடையாததால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
23
திருச்செந்தூர் கோவில் வளாகம்
இந்த பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தின் மேல் தளத்தில் பணியில் வடமாநிலத் தொழிலாளி அவிஜித் போதார் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவிஜித் போதாருக்கு தலையில் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சக பணியாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
33
வடமாநிலத் தொழிலாளி
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த அவிஜித் போதாருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.