என்னை பார்ப்பதற்கே தயங்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி மிகவும் வாடிப்போய் உள்ளார். கடந்த 2011ம் ஆண்டு என்னை உட்பட பலரையும் கட்சியில் இருந்து நீக்கியது நாடறிந்த உண்மை. அதனை அவர் இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 2017ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இவர்கள் தான் சசிகலாவை பொதுச்செயலாளராக்கினர். பின்னர் ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது.
24
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டது ஏன்..?
இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதாக பழனிசாமியிடம் சொல்லவில்லை. ஆனால் வேறு வேட்பாளரை நிறுத்தினால் பார்ம் ஏ, பார்ம் பி.யில் கையெழுத்திடுவதில் சிக்கல் வரும். அதனால் துணைப்பொதுச்செயலாளரான நீயே போட்டியிடு என எனது சித்தி (சசிகலா) சிறையில் இருந்தபடி சொன்னார். அது என்னுடன் வந்த தளவாய் சுந்தரத்திற்கே தெரியும். ஆனால் நான் சட்டமன்ற உறுப்பினராகிவிட்டால் முதல்வர் பதவிக்கு குறிவைப்பேன் என்று பழனிச்சாமி நினைத்தார்.
34
பழனிசாமியை ஏற்காக எம்எல்ஏ.க்கள்
நான், எனது சித்தி உட்பட எங்களைச் சேர்ந்தவர்கள் தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம். பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் தொப்பி அணிந்துகொண்டு எனக்காக இவர்கள் தான் வாக்கு கேட்டார்கள். ஆனால் இன்று டிடிவி தினகரன் யார் என்று பேசுகிறார்கள். கூவத்தூர் விடுதியில் தங்கவைக்கப்பட்ட போது பல அமைச்சர்கள் பழனிசாமியை ஏற்கவில்லை. அவரது தீவிர ஆதரவாளராக உள்ள செம்மலைக்கூட பழனிசாமியை ஏற்கவில்லை. நாங்கள் தான் அனைவரையும் சமாதானப்படுத்தி பழனிசாமியை முதல்வராக்கினோம்.
என்னைப் பார்ப்பதற்கே பழனிசாமி தயங்குவார். அப்படி இருக்கையில் அவரை எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியும்? பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணையாது. பழனிசாமியை முதல்வராக ஏற்பது, தற்கொலை செய்துகொள்வதற்கு சமமானது” என்று தெரிவித்துள்ளார்.