இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மின் பழுது காரணமாக பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்திட அறிவுறுத்தினார்கள். மேலும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்திடவும், மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் ஆணையிட்டார்கள். சென்னையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே உள்ள 125 ரோந்து குழுக்களை சுற்றுப்பணியில் ஈடுபடுத்தவும், அக்குழுவினர் அவசரப் பணிகளுக்காக புகார் பெறப்படும் இடங்களுக்குச் சென்று புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பழுதினைச் சரி செய்திடவும், பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் நிறுவனங்கள் சீரிய முறையில் செயலாற்றிட வேண்டுமெனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.