2026 சட்டப்பேரவை தேர்தல் தமிழக அரசியல் களத்தையே புரட்டிப் போட்டு விட்டது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தது. 108 இடங்களில் தவெக வென்ற நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் விஜய் முதல்வராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தவெக தலைவரும், முதல்வருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும் செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க 'வெற்றி நியூஸ்' (Vetri News) என்ற பெயரில் புதிய சாட்டிலைட் செய்தி சேனல் ஒன்றைத் தொடங்க இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.
அதாவது ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சேனலின் லோகோ வெளியாகலாம் என்றும், ஜூன் 30-க்குள் இதர ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்படலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாகப் பரவி வருகிறது. அத்துடன் 'வெற்றி' என்ற பெயரிலான ஒரு லோகோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.