Tamilnadu Weatherman Pradeep John: அடுத்த 5-6 நாட்களுக்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது வானிலை மையம் தெரிவித்திருந்தது.
25
சென்னை வானிலை அப்டேட்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்திருந்தது.
35
சென்னையில் கனமழை
அதன்படி சென்னையில் அதிகாலையில் கனமழை வெளுத்து வாங்கியதால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதிகபட்சமாக மணலி புதுநகரில் 13 செ.மீ. மழையும், கொரட்டூர், பாரிமுனையில் 9 செ.மீ., கத்திவாக்கம், 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் வெளியில் செல்லும் போது மறக்காமல் குடை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
55
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதனிடையே தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த 5-6 நாட்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களில் இப்படிதான் இருக்கும். டமால் டூமிலுடன் இரவில் மழை பெய்யும். காலையில் குளிர்ந்த சூழல் நிலவும். மாலை நேரத்தில் வெயில் அடிக்கும். ரிப்பீட்டாக இது நடக்கும். மழை குறித்த எனது பதிவை கூட பார்க்க வேண்டாம். சென்னை முழுவதும் மழை பெய்யும். செப்டம்பர் புயல்கள் மெதுவாக நகரும் நிலையில் ஒரு மணிநேரத்துக்கு உள்ளாக 50 முதல் 70 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.