மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்திப்பதற்காக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி உடன் வந்த மூத்த நிர்வாகிகளை வெளியேற்றிவிட்டு தனிமையில் பேச்சுவார்த்தை நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. கடந்த சில மாதங்களாக இயல்பாக இருந்த அதிமுக.வில் தற்போது மீண்டும் பூகம்பம் வெடித்துள்ளது. அதன்படி எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் திடீரென அவருக்கு எதிராக கலகக்குரல் எழுப்பிய சம்பவம் தற்போது வரை புகைந்துகொண்டே இருக்கிறது.
கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மூத்த நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். அப்போது தான் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். பிரிந்து சென்றவர்கள் கட்சியில் இணைக்கப்படவில்லை என்றால் இணைப்பு பணியை நான் மேற்கொள்வேன் என்று கூறி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். ஆனால் கெடு விதித்த மறு தினமே யாரும் எதிர்பாராத வகையில் செங்கோட்டையனின் அனைத்து வகையான கட்சிப் பணிகளையும் பறித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து கட்சியில் நடைபெறும் சிக்கல்கள் தொடர்பாக முறையிட்டார். இந்நிலையில் குடியரசு துணைத்தலைவர் கே.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இதனை முடித்துக் கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
34
மூத்த நிர்வாகிகளுடன் டெல்லியில் முகாமிட்ட எடப்பாடி
சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாக சொன்னாலும், அமித்ஷாவுடன் ஆலோசனை மேற்கொள்வதே டெல்லி பயணத்தின் முக்கிய நோக்கம் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர். இந்நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த நிர்வாகிகளான சிவி சண்முகம், வேலுமணி, முனுசாமி, இன்பதுரை, தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
மூத்த நிர்வாகிகளுடன் அமித்ஷாவை சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்ட பழனிசாமி ஒரு கட்டத்தில் நிர்வாகிகள் அனைவரையும் வெளியேற்றி உள்ளார். அதன்படி மூத்த நிர்வாகிகள் அனைவரும் எதிர்க்கட்சி தலைவருக்கான பாதுகாப்பு அதிகாரிகளுடன் தாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்றனர். எடப்பாடி பழனிசாமியும் அவர்களுடன் சென்றுவிட்டதுபோல் காட்டுவதற்காக எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரிகளும் மூத்த நிர்வாகிகளுடன் சென்றதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் சுமார் 40 நிமிடங்கள் அமித்ஷாவுடன் தனிமையில் பேசிய பழனிசாமி கட்சியில் நிலவும் சலசலப்புகள் தொடர்பாக விவாதித்துள்ளார். அமித்ஷா உடனான சந்திப்புக்காக உடன் வந்த மூத்த நிர்வாகிகளையே நம்பிக்கை இல்லாமல் பழனிசாமி வெளியேற்றிய விவகாரம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.