பள்ளிகளில் சாதி வேறுபாடுகளை அகற்ற புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் சாதி விவரங்கள் இடம்பெறக் கூடாது, சாதி அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும்.
பள்ளி மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள், கருத்து வேறுபாடுகள் அடிப்படையில் வன்முறை உருவாகுவதைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பது மிக இன்றியமையாதது. எனவே ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து நல்லிணக்கத்தின் இலக்காக சாதி/சமூக வேறுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
27
மாணவர்களின் வருகை பதிவேடு
அதன்படி பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்களை மந்தனமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான எந்த நெடுவரிசையோ அல்லது விவரங்களோ இருக்கக்கூடாது. எந்த நேரத்திலும் வகுப்பு ஆசிரியர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களின் சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்கவோ, மாணவரின் சாதி அல்லது சாதிக்குக் காரணமான தன்மை பற்றி எந்த இழிவான கருத்துக்களையும் தெரிவிக்கவோ கூடாது.
37
மாணவரின் உதவித் தொகை
எந்தவொரு மாணவரின் உதவித் தொகை தொடர்பாக பெறப்பட்ட தகவல் தொடர்புகளின் விவரங்களை அறிவிப்பதற்கான இடம் வகுப்பறைகள் அல்ல. அத்தகைய தகவல் தொடர்புகள் பெறப்பட்டால், தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மாணவர்களை தனியே அழைக்காமல் குழுவாக அழைத்து தகவலை வாய் மொழியாகவோ அல்லது எழுத்து புர்வமாகவோ வழங்க வேண்டும். இந்நேர்வுகளில் பெற்றோர்களுக்கு குறுச்செய்தி அலைபேசி வாயிலாக அனுப்பிடவும் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளியில் மாணவரின் தனிப்பட்ட விவரங்கள் ஒரு பதிவு கோப்பாகப் பராமரிக்கும் நிலையில் தலைமை ஆசிரியர் அனுமதியுடன் மட்டுமே அக்கோப்பினை பயன்படுத்திட வகுப்பாசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலைமை ஆசிரியரால் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் வண்ண மணிக்கட்டுபட்டைகள், மோதிரங்கள் அல்லது வேறுபாடுகளை வெளிப்படையாக தெரியக்கூடிய அடையாளங்கள் அணிவதைத் தடைசெய்வதோடு அவற்றை அணிவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அவ்வப்போது வழங்கிட தெரிவிக்கப்படுகிறது.
57
மிதிவண்டிகளில் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்
மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிப்பிடும் அல்லது சாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றத் தவறினால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துவதோடு கூடுதலாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். சாதி ரீதியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் மற்றும் அணுகக் கூடிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தக்க வழிக்காட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கிடல் வேண்டும்.
67
நன்நெறி வகுப்புகள் கட்டாயம்
பள்ளி வளாகங்களில் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்துவதை தடை செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். அனைத்து வகையான பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நன்நெறி வகுப்புகள் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். சுழற்சி முறையில் இந்த நன்நெறி விரிவுரையை வழங்க ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரை நியமிக்க வேண்டும். கூடுதலாக, இந்த விரிவுரைகளில் பங்களிக்க நன்கு தகுதி வாய்ந்த வெளிநபர்களையும் அழைக்கலாம்.
77
பள்ளிக்கல்வித்துறை உதவி எண்
பள்ளிகளில், மேலும் அதிக அளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இப்பதாகைகளில் Child Helpline 1098 மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.