தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே மாதம் இறுதியில் தொடங்கியது. இதனால், கேரளாவை ஓட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது அதி கனமழை பெய்து வந்தது. அவ்வப்போது சென்னை, விழுப்புரம், நெல்லை, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் தெற்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை, நீலகிரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் மழை கொட்டி தீர்த்தது.
24
சென்னை வானிலை மையம்
இந்நிலையில் இன்று தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
34
சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39°செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு அதாவது காலை 10 மணிவரை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோயமுத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.