தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்கள் கல்வியை தொடர வேண்டும், உயர்கல்வியில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளவிருப்பவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
25
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்
இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்புத் திட்ட இயக்குநர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதலமைச்சர் அவர்களால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
35
ஊக்கத்தொகை
இந்நிலையில் 2025-2026- க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், ஒன்றிய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திட, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு, மாதம் 7,500 ரூபாயும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 25,000 ரூபாயும், ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது எனவும், இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்குத் தயாராகும் இளைஞர்களுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப் படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (25.05.2025) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 659 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. தற்போது, (11.11.2025) யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நான் முதல்வன் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற்ற 659 பயனாளிகளில், 155 பேர் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 87 பேர் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
55
50,000 ரூபாய் ஊக்கத்தொகை
இதனைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான பயிற்சி பெற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 50,000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2025) யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, 13.11. 2025 முதல் 24.11. 2025 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.