தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்கக் கோரி கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையில் இணையாததை சுட்டிக் காட்டி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தேசிய கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் அடம்பிடித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் முடங்கி உள்ளது. குறிப்பாக RTE மூலம் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச கல்வி திட்டம் இந்த ஆண்டு தற்போது வரை நடைபெறவில்லை.
24
சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டம்
இந்நிலையில் தமிழகத்திற்கான கல்வி நிதியை உடனடியாக விடுவிக்கக்கோரி திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கடந்த 4 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையிலும் தனது போராட்டத்தை மட்டும் கைவிடாமல் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
ஆனால் அவரது உடல்நிலையை சுட்டிக்காட்டிய மருத்துவர்கள் எம்.பி.யின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவருக்கு ஏற்கனவே உடலில் சில பிரச்சினைகள் இருப்பதால் அவர் போராட்டத்தைத் தொடர்ந்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக அமைய வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தனர்.
34
அரசியல் தலைவர்கள் ஆதரவு
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.யை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசு, துரை வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து போராட்டத்திற்கான தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அந்த வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று இரவு எம்.பி.யை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் சசிகாந்தின் உடல்நிலையை சுட்டிக்காட்டி போராட்டத்தைக் கைவிடுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார். அதனை அவரிடம் விளக்கியதாக கனிமொழி தெரிவித்தார்.
இந்நிலையில் எம்பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க தான் மேற்கொண்டு வந்த உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவித்தார். தனது கட்சியின் தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்க்கே உள்ளிட்டோர் கேட்டுக் கொண்ட நிலையில், அதன் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்துள்ளார்.