கரூரில் தனது கட்சி நிர்வாகிகள் உயிரிழந்து கிடக்கும் போது எப்படி ஒரு தலைவர் அவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் செல்ல முடியும்? இப்படி ஒரு தலைவரை பார்த்ததே இல்லை என எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி இன்று சென்னையில் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில், “உயிரிழந்த குழந்தைகள், இளைஞர்களின் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் யாரையும் குற்றம் சொல்வதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருப்பது தான் சரியாக இருக்கும்.
24
ஆறுதல் கூட சொல்லாமல் ஓடுவதா..?
கட்சியின் தலைவர் என்பவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதோ, அல்லது தன்னுடைய பாதுகாப்பை மட்டும் பிரதானமானதாக நினைப்பதோ கிடையாது. இப்படிப்பட்ட ஒருவரை நான் பார்த்ததே இல்லை. அவரால் அப்படி இருக்க முடியவில்லை என்றால் இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்திருக்க வேண்டும். மற்ற கட்சிகள் அப்படி தான் இருக்கின்றன.
34
ஆதவ் அர்ஜூனாவின் பதிவு பொறுப்பின்மையின் உச்சக்கட்டம்..
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் உதவி செய்வதை நேரில் பார்க்க முடிந்தது. ஆனால் எந்தவொரு தவெக நிர்வாகியும் அங்கு இல்லை. நடைபெற்ற சம்பவத்திற்கு சிறிதாவது பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் பதிவு உச்சக்கட்ட பொறுப்பின்மையைக் காட்டுகிறது. சூழலை அமைதிப்படுத்த முயலாமல் வன்முறையைத் தூண்டும் வகையில், மேலும் உயிரிழப்புக் ஏற்படுத்தும் வகையிலான பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும். மக்களைப் பற்றி கவலை இல்லாமல் எப்படியாவது அரசியல் ஆதாயம் பெறவேண்டும் என்று நினைப்பது தவறு.
சிபிஐ விசாரணை வேண்டும் என யார் வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் தற்போது தனிநபர் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையமும் அடுத்த நாளே விசாரணையைத் தொடங்கிவிட்டது. விசாரணை ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் நபர் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.