Marudhu alaguraj: அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மருது அழகுராஜ், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே, அவருக்கு திமுகவில் முக்கிய பதவி.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிகையின் நிர்வாகம் சென்றதை அடுத்து அவர் நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், ஓபிஎஸ்- இபிஎஸ் வசம் அதிமுக சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
25
ஒபிஎஸ் தீவிர ஆதரவாளர்
2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மருது அழகுராஜிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான மோதல் உச்சம் அடைந்த நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டது.
35
எடப்பாடி பழனிசாமி
இந்த சூழலில்தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்தார். ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். பின்னர் ஓபிஎஸ் செயல்பாடுகளும் திருப்தி அளிக்காததால் கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்து வந்தார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் வருகையை அடுத்து அவருக்கு ஆதரவாக மருது அழகுராஜ் கருத்து தெரிவித்து வந்தார். ஆகையால் அவர் தவெகவில் இணைய உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் திடீரென அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
55
மருது அழகுராஜ்க்கு முக்கிய பொறுப்பு
இந்நிலையில் திமுகவில் இணைந்த சில நாட்களிலேயே மருது அழகுராஜ் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஊடக விவாதங்களில் கட்சியின் நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்த, ஏற்கனவே உள்ள பேச்சாளர்களுடன் கூடுதலாக ஆறு பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ப. தாயகம் கவி, மருது அழகுராஜ், பழ. செல்வகுமார், திருப்பத்தூர் ரஜினி, சைதை சாதிக், வழக்கறிஞர் துரை தமிழ்ச்செல்வன் ஆகியோர் திமுகவின் சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோருடன், இணைந்து பங்கு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.