பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை அதிகம் பேர் விரும்புகின்றனர். இதனால், அனைத்து ரயில்களிலும் 3 மாதங்களுக்கு முன்பாகவே ரிசர்வேஷன் செய்யப்பட்டு விடுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் எப்போதும் நிரம்பியே காணப்படுகின்றன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் யார்டு சீரமைப்பு பணிகள் தொடங்க உள்ளது. எனவே, இந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் விதமாக நெல்லை - திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயிலை ரத்து செய்ய மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வழக்கமாக காலை 8.15 மணிக்கு திருச்செந்துரில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு நெல்லைக்கு வரும் பயணிகள் ரயில், பணிகள் நடக்க உள்ள யார்டு பகுதியில் நிறுத்தப்படும். இந்த ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவில் திருச்செந்தூருக்கு சென்று செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலாக சென்னைக்கு புறப்படும்.
இதையும் படிங்க: Monthly Pension Increase: குட்நியூஸ்! தமிழகத்தில் மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
தற்போது யார்டு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரயிலும் மாலை 4.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு இரு மார்க்கத்திலும் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் பிற நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என தெரிவித்துள்ளனர்.