Published : Sep 07, 2024, 07:05 AM ISTUpdated : Sep 07, 2024, 07:08 AM IST
முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற வழிவகை செய்யப்படும்.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி வைத்து விழாவில் உரையாற்றிய போது தாய்நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவ பணியில் கழித்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடும் வகையில் முதல்வரின் காக்கும் கரங்கள் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்வதோடு, கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என கூறினார்.
மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும். விடுதலை போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000 என்பது 21,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். அதேபோல் விடுதலை போராட்ட தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கி வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000த்திலிருந்து இனி ரூ.11,500 உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
34
Tamilnadu Government
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு, மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் செலவீனமாக 29.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சிவகங்கை மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்றுவரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியத்தை ரூ.10,000யிலிருந்து ரூ.10,500ஆக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் செலவீனமாக 5.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.