வழக்கறிஞர் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறை இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சென்ற கார், முன்னாள் சென்ற ஒரு ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதை அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த வழக்கறிஞர் தட்டிக்கேட்டபோது, திருமாவுடன் வந்தவர்கள் வழக்கறிஞரை சரமாரியாக தாக்கினார்கள். இது தொடர்பான வீடியோ வைரலாகி பலரும் திருமாவளவனை விமர்சித்தனர்.
24
திருமாவளவன் சர்ச்சை பேச்சு
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு விளக்கம் கொடுத்த திருமாவளவன், அந்த நபர் வேண்டுமென்றே காருக்கு முன்னாள் ஸ்கூட்டரை நிறுத்தி வம்பிழுத்ததாகவும் விசிகவினர் அவரை தாக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த சம்பவத்தில் பின்னணியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சதி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் ''அந்த நபர் முறைத்து பார்த்ததால் தான் இந்த அடி. அதுவும் சரியா கூட அடிக்கல'' என்று திருமாவளவன் பேசியது கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது.
34
காவல்துறை வழக்குப்பதிவு
இதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது 3 பிரிவுகளிலும், விசிகவினர் மீது 2 பிரிவுகளிலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி வழக்கறிஞர் கே.பாலு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
காவல் துறை என்ன செய்தது?
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி செந்தில் குமார், ''உயர்நீதிமன்றம் முன்பு தாக்குதல் சம்பவம் நடந்தும் காவல்துறை வழக்குப்பதிவு மட்டுமே செய்துள்ளது. அதுவும் ஒரு தரப்பினர் தாக்கப்பட்டதில் எப்படி இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது? வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட முழு சம்பவமும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்த காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தனர்?
மேலும் சம்பவத்தை கட்டுப்படுத்த வேண்டிய அங்கிருந்த தலைவர் (திருமாவளவன்) அதை தடுக்காமல் பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்பட்டது போல் தெரிகிறது. இந்த விவாகரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.