கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பெருந்துயரம் மீள முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24
நள்ளிரவுக்குள் கைதாகிறார் புஸ்ஸி ஆனந்த்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தவுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் தலைமறைவானர்கள். குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் எங்கே இருக்கிறார்? என்பதே தெரியவில்லை. அவரை பிடிக்க கரூர் ஏ.டி.எஸ்.பி பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை காவலர்கள் புஸ்ஸி ஆனந்த்தை வலைவீசி தேடி வருகின்றனர். இன்று நள்ளிரவுக்குள் புஸ்ஸி ஆனந்தை பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
34
விஜய் பிரசாரத்தில் புஸ்ஸி ஆனந்தின் பங்கு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் முதல் குற்றவாளியாகவும், தவெக இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விஜய் தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்களில்அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் புஸ்ஸி ஆனந்த் தான். அவர் தான் எத்தனை பேர் வருவார்கள்? என்பது குறித்து காவல் துறையினரிடம் தெரிவித்து அனுமதி வாங்குவார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் மீது காவல்துறையினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். விஜய் வேண்டுமென்றே பிரசாரத்துக்கு தாமதமாக வந்ததாகவும், அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தி மக்கள் கூட்டத்தை கூட்டி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்கள்.
இதேபோல் கரூருக்கு முன்பாக நாமக்கல் பிரசாரத்தில் பலர் மயக்கம் அடைந்தனர். உடனே பிரசாரத்தை நிறுத்தும்படி புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளிடம் வலியுறுத்தியும் அவர்கள் மறுத்து விட்டனர் என்று நாமக்கல் காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.