கரூரில் உயிரிழந்தவர்களை பார்த்து அழுது புலம்பிய திமுக அமைச்சருக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கிண்டலடித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
24
கதறி அழுத அன்பில் மகேஷ்
இதே போல் சம்பவம் நடந்தவுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியான குழந்தைகளின் உடல்கள் கிடத்தப்பட்டு இருந்த நிலையில், அதைப் பார்த்ததும் அன்பில் மகேஷ் கண்ணீர் விட்டு அழுதார். ''ரூல்ஸை பாலோ பண்ணுங்கனு படிச்சி படிச்சி சொன்னோமே'' என்று அவர் கதறி அழுதார்.
34
கள்ளக்குறிச்சிக்கு ஏன் உடனே செல்லவில்லை?
அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அன்பில் மகேஷ்க்கு ஆறுதல் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ''கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு காரணமான விஜய் சென்னை தப்பி செல்ல, முதல்வரும், திமுக அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்கின்றனர்'' என்று திமுகவினர் தெரிவித்தனர்.
அதே வேளையில் ''திமுக அமைச்சர்களுக்கு நடிப்பதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது இதே முதல்வர், அமைச்சர்கள் எங்கு சென்றனர்'' என தவெகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், கரூரில் அழுது புலம்பிய அந்த அமைச்சருக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கிண்டலடித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ''கரூரில் இறந்தவர்களை பார்த்து அழுது புலம்பிய அமைச்சருக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்தில் முதல்வர் நேரில் செல்லவில்லை. ஆனால் கரூருக்கு இரவோடு இரவாக செல்கிறார். இந்த சம்பவம் குறித்து நீதிமன்றமே குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார்.