1998ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசை கவிழ்த்ததன் மூலம் ஜெயலலிதா வரலாற்று பிழையைச் செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த 1998ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுடன் கூட்டணி அமைத்திருந்தது. தொடர்ந்து 13 மாதங்கள் இந்த கூட்டணி தொடர்ந்த நிலையில், ஜெயலலிதா முன்வைத்த கோரிக்கைகளை பாஜக அரசு நிறைவேற்றாத நிலையில் அக்கட்சிக்கு தாம் வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதனால் வாஜ்பாய் தலைமையிலான அரசு வீழ்ந்தது.
அப்போது தன் மீதான வழக்குகளை முடித்து வைக்க வேண்டும், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக அரசை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா கோரிக்கை விடுத்ததாகவும், இது நிறைவேறாததால் ஆதரவு திரும்பப் பெறப்பட்டதாகவும் வரலாறு உண்டு.
23
ஜெயலலிதா வரலாற்று பிழையை செய்துவிட்டார்
இந்நிலையில், கோவில்பட்டியில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “1998ல் வாஜ்பாய் அரசை கவிழ்த்தன் மூலம் ஜெயலலிதா வரலாற்று பிழையை செய்துவிட்டார். 13 மாதங்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், அப்போது குறுக்கே வந்த சுப்பிரமணியின் பேச்சை கேட்டு ஜெயலலிதா ஆட்சியை கவிழ்த்தார். அதன் பின்னர் திமுக 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்று தங்கள் கட்சியை வளர்த்துக் கொண்டனர்.
33
திமுக வளர காரணமே பாஜக தான்!
தமிழகத்தில் திமுக வளர காரணமாக இருந்ததே பாஜக தான். ஆனால் அவர்கள் தற்போது பாஜக என்னவோ தீண்டத்தகாத கட்சியைப் போன்று பேசுகிறார்கள். ஜெயலலிதா மட்டும் அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் தற்போது திமுக என்ற கட்சியே இருந்திருக்காது” என்று ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து பேசியுள்ளது கட்சியில் தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.