தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.
நேர் எதிர் பாதையில் செல்லும் தமிழக காங்கிரஸ்
தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும் நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.