Published : Sep 19, 2024, 06:53 AM ISTUpdated : Sep 19, 2024, 07:53 AM IST
School Student: 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிறார்களிடையே மறைந்து கிடக்கும் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம், ஆகிய நான்கு கலைப் பிரிவுகளிலும், 5 முதல் 8, 9 முதல் 12, 13 முதல் 16 வயதுப் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
9 முதல் 12, 13 முதல் 16 ஆகிய வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சிறார்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி, பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. அதன்படி முதற்கட்டமாக 5-8, 9-12,13-16 என்ற மூன்று வயது வகைப் பிரிவில் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் ஆகஸ்ட் 24ம் தேதியன்று குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போட்டிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: பள்ளி அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான கால வரம்பு நீட்டிப்பு குறித்து மாவட்டங்களில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கு செப்டம்பர் 27-ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
மேலும் இந்த கலைத் திருவிழா போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் வாய்ப்பு கொடுத்தல் வேண்டும். அதோடு சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து போட்டிகளில் மாணவர்களை கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.