தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தலைமைசெயலகத்தில் ஐ பெரியசாமியின் அறை பூட்டப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அதிமுக பாஜகவுடன் கூட்டணியை அமைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சர்களை குறிவைத்து மீண்டும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், கேஎன் நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
23
ஐ பெரியசாமியை சுற்றிவளைத்த அமலாக்கத்துறை
தற்போது தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனைகளை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் 2006-2011 காலகட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பான புகார்கள் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனைகள் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில், அவரது வீடு, மகன் ஐ.பி. செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோரது வீடுகள், மற்றும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள எம்எல்ஏ விடுதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன.
33
அமைச்சர் அறைக்கு பூட்டு
இந்த சோதனைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, குறிப்பாக திண்டுக்கல்லில் செல்வாக்கு உள்ள அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனைநடத்தி வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ. பெரியசாமியின் ஆதரவாளர்கள் திண்டுக்கலில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஐ. பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், தலைமைசெயலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தலைமைசெயலகம் உள்ளே செல்லும் வழியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ பெரியசாமியின் அமைச்சர் அலுவலகத்திற்கு செல்லும் இடங்களும் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. தலைமைசெயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைய முடியாதபடி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.