தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.
இதனையடுத்து குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது. அதாவது வகுப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் ( Onscreen Certificate Verification) செய்ய வேண்டியது அவசியம்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் முறை
முதலில் https://apply.tnpscexams.in/ என்ற இணைப்பிற்கு செல்லவும். அதில் முகப்பு பக்கத்தில் இடது புறத்தில் நீல நிறத்தில் தலைப்புகள் இடம்பெற்று இருக்கும். அதில் மூன்றாம் இடத்தில் One Time Registration and Dashboard என்ற தலைப்பை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஏற்கனவே பதிவு செய்தோர் உள் நுழைய (Registered User) என்பதை கிளிக் செய்து தேர்வர்களின் யூசர் பெயர் மற்றும் பாஸ்வோர்டு உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும். அதில் குரூப் 4 தேர்விற்கு எதிரில் சான்றிதழ் பதிவேற்றம் என்று இருக்கும் பட்டையை கிளிக் செய்து தயாராக வைத்திருக்கும் சான்றிதழ்களின் புகைப்படங்களை அந்ததந்த இடத்தில் பதிவேற்றம் செய்யவும்.