தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. கடந்த சில நாட்களாகவே தலைநகர் சென்னையில் இடைவிடாமல் மழை அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
24
தென் மாவட்டங்களில் கனமழை
அதாவது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
34
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் 7 முதல் 11ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.