தங்கத்தின் விலை உயர்வால், தமிழக கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கான நகைக்கடன் தொகை ரூ.6,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 17 முதல் அமலுக்கு வந்துள்ளது.
தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு சவரன் ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் அவசர பண தேவைகளுக்கு தங்க நகைகளை அடகு வைப்பது மக்களின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது. அதாவது அடகு கடை மற்றும் தனியார் வங்கிகளில் அதிக வட்டி என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றில் தங்க நகைகள் அடமானம் வைக்கின்றனர்.
24
கூட்டுறவு வங்கி
குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள் இந்த கூட்டுறவு வங்கியை அதிகளவில் நாடுகிறார்கள். மற்றொரு காரணம் மாநில அரசுகள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்படும் நகைகடன் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையிலும் வைக்கின்றனர். இங்கு பயிர் கடன் உட்பட கடன்கள் வழங்கப்படுகின்றன.
34
கிராமுக்கு 7,000 ரூபாய் வழங்க ஒப்புதல்
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில் ஒரு கிராமிற்கு 6,000 ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆகையால் தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு 92,000 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, கூட்டுறவு வங்கிகளில் தங்கத்திற்கு அதிக தொகை கடன் வழங்குவது குறித்து முடிவெடுக்க, கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் சமீபத்தில் கூட்டம் நடைபெற்றது. அதில், நகைக் கடனுக்கு கிராமுக்கு 7,000 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு கடன் தொகை, 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை, கடந்த நவம்பர் 17-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தங்க நகைக்கடன் பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் மட்டும் சுமார் 42 லட்சம் பேருக்கு, 45,000 கோடி ரூபாய் நகைக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.