முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்ய பிரியா, ஊட்டியிலிருந்து மதுரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அதிமுக முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். மகள் வழி பேத்தி திவ்ய பிரியா (29). இவர் மதுரையில் பல் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் கார்த்திக் ராஜா. இந்நிலையில் திவ்ய பிரியா தன் கணவர் மற்றும் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் கடந்த மே 20-ம் தேதி சுற்றுலாவுக்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி சென்றனர். அங்கு 2 நாள்கள் தங்கி பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்துள்ளனர். பின்னர் நேற்று மாலை திவ்ய பிரியா குடும்பத்தினர் மதுரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
24
விபத்தில் சிக்கி பலி
காரை கார்த்திக்கின் இளைய சகோதரர் பார்த்திபன் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கார் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை, கல்லாறு அருகே முதல் கொண்டை ஊசி வளைவில் வந்த போது கார் திடீரென பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரை முட்டி கார் கவிழ்ந்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த திவ்ய பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் திவ்ய பிரியாவின் கணவர் கார்த்திக் மற்றும் அவர்களின் உறவினர்கள் பரமேஷ்வரி, வளர்மதி ஆகியோரும் படுகாயமடைந்து வலியால் அலறி துடித்துள்ளனர்.
34
பிரேக் பிடிக்காததால் விபத்து?
இந்த சம்பவம் தொடர்பாக சக வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த திவ்ய பிரியாவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிரேக் பிடிக்காததால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஊட்டியில் குடும்பத்துடன் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பிய போது திவ்ய பிரியா விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.