அதிமுகவில் உட்கட்சி மோதல்
தமிழகத்தின் முதலமைச்சராக 3 முறை பணியாற்றியவர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர், ஜெயலலிதாவி்ன நம்பிக்கைக்குரியவராக இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் முதலமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் மேற்கொண்டார். இதனையடுத்து அதிமுகவிற்கு எதிராக தனி அணியாக செயல்பட்டவர், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்திலும் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக வாக்களித்தார்.
பிரிந்து கிடக்கும் அதிமுக
அப்போது தான் எடப்பாடி பழனிசாமி- ஒ.பன்னீர் செல்வம் இடையே சமாதானப்பேச்சுவார்த்தை மூலம் இருவரும் ஒன்றிணைந்து மீதமுள்ள 3 ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தை அதிமுக இழந்தது. இதனையடுத்து அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் அதிகரிக்க தொடங்கியது. இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமையே போதும் என குரல் எழுந்தது. இதனையடுத்து அதிமுக ஒருங்கிணப்பாளர் பதவி நீக்கப்பட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பி.எஸ் மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளார்.
"வித்யா பாரதி புரஸ்கார்" விருது
பல சட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளார். இந்தநிலையில் பாஜகவுடன் நெருக்கம் காட்டும் ஓபிஎஸ், அதிக அளவில் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். இந்த நிலையில் தான் ஓ.பன்னீர் செல்வத்திற்கு "வித்யா பாரதி புரஸ்கார்" விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் சங்கராச்சாரியர் மகா சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் பொன் விழா ஆண்டினை முன்னிட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்ரீ வித்யாதீர்த்த அறக்கட்டளை சார்பில், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுரிமையை ஊக்குவிப்பதில் சிறந்த பங்களித்தமைக்காக விருதுகள் வழங்கப்பட்டது.
ஏன் விருது கொடுக்கப்பட்டது.?
அந்த வகையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், ஓ. பன்னீர்செல்வத்திற்கு "வித்யா பாரதி புரஸ்கார்" விருதினை ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சன்னிதானம் ஜகத்குரு விதுசேகர பாரதி சுவாமிகள் வழங்கினார். இந்த விருது வழங்கும் விழாவில் பேசிய ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சன்னிதானம் ஜகத்குரு விதுசேகர பாரதி சுவாமிகள், ஏன் ஒரு அரசியல்வாதியான பன்னீர்செல்வத்திற்கு இந்த விருது கொடுக்கப்பட்டது என கேட்கலாம். எத்தனையோ பேர் உள்ள போது இங்கு அவர் ஒரு அரசியல்வாதியாக வரவில்லை, சிஷயனாக இங்கு வந்துள்ளார் என தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.