இது தொடர்பாக தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TABCEDCO) கறவை மாடு வாங்குவதற்காக ரூ. 1,20,000 வரை கடனுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த கடன் உதவி திட்டமானது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ. 1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ. 60,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் எனவும், ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம், பயனாளியின் பங்கு 5 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.