ADMK OPS Sasikala : சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் திமுக தேர்தலுக்காக வாக்குகளை பெறுவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாக தான் பார்க்க முடிகிறது.
நான்காண்டு கால திமுக ஆட்சியில் உள்ள பிரச்சினைகளை மறைக்கவே இது போன்ற நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றி உள்ளார். தொகுதி மறுசீரமைப்பை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் பேசவேண்டும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துகிறார்கள்.
ஊழல் மறைக்க நடந்த கூட்டம்
நேற்றைய தினம் தொகுதி சீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டமானது, திமுக ஆட்சியில் லஞ்சம், ஊழல் மறைக்க நடந்த கூட்டமாகும், மதுபான விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது செய்தி வந்துள்ளது. இதன் மூலம் திமுக ஆட்சியில் ஊழல் நடந்தது நிருபணம் ஆகியுள்ளது. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலுமே ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
பாஜகவின் அழுத்தமா.?
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை இணைக்க பாஜக அழுத்தம் கொடுப்பதாக வெளியாகும் செய்திக்கு பதில் அளித்த அவர், அதிமுகவில் இருந்து நீக்கபட்டவர்கள் இணைக்கப்படுவது குறித்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் தான் கண்,காது,மூக்கு வைத்து நீங்களே எழுதி கொண்டிருக்கிறீர்கள். தினந்தோறும் அதிமுக பற்றி செய்தி வர வேண்டும் என செயல்படுகிறார்கள்.
அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்ற இயக்கம். அப்படி இருக்கும் பொழுது எதற்கு இந்த கேள்வியெல்லாம்! இன்றுவரை சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வது குறித்த திட்டம் எதுவும் இல்லையென உறுதியாக கூறினார்.
ராஜ்யசபா தேர்தல் யாருக்கு சீட்.?
ராஜ்யசபா தேர்தல் தொடர்பாகவும், யாருக்கு போட்டியிட வாய்ப்பு என்பது தொடர்பான கேள்விக்கு, ராஜ்ய சபா உறுப்பினர் தேர்வு குறித்து அறிவிப்பு வந்தவுடன் அது குறித்து முடிவு சொல்லுவோம் என தெரிவித்த அவர், அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு, கொள்கை நிலையானது கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரியை முறியடிக்க வியூகம் அமைத்து அதிக வாக்குகள் பெற்று எதிரியை வீழ்த்துவது.
திமுகவை போல் நிரந்தரமான கூட்டணி கிடையாது அப்படி ஒரு கூட்டணி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் எதற்கு தனி தனி கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து விடலாமே என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இன்று இருப்பவர்கள் நாளை இல்லை
சாலையில் செல்பவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் ஜாகீர்உசேன் வெட்டி கொல்லப்படுகிறார். காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டவருக்கு பாதுகாப்பு தரவில்லை. மாறாக கட்டப்பஞ்சாயத்துதான் நடக்கிறது. குரல் பதிவு வெளியிட்டு தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார் அதையும் பொருட்படுத்தவில்லை. திமுக ஆட்சியில் இன்று இருப்பவர்கள், நாளை உயிருடன் இருப்போமா, இல்லையா என்று தெரியாது. என்ற நிலைதான் உள்ளது.
திமுகவின் வாக்குறுதியை நம்பி அனைவரும் உருகி போய் ஓட்டு போட்டார்கள். இப்போது காய்ந்து போய் போராட்டம் நடத்துகிறார்கள். அதிமுகவை பொருத்தவரை மக்களுக்கு எது நல்லதோ அதை செய்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.