
முட்டை பிரியரா நீங்க? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான். நாடு முழுவதும் முட்டை விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை 8.50 முதல் 9 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோழித் தீவன விலை உயர்வுதான் முக்கிய காரணம் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் விலை சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
தீவன விலை உயர்வு மற்றும் சர்வதேசப் பதற்றம்
கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும் மக்காச்சோளம், சோயாபீன்ஸ் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் இறக்குமதி மற்றும் விநியோகத்தைப் பாதித்துள்ளதே இதற்குக் காரணம் என கோழிப்பண்ணை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய முட்டை உற்பத்தி மையமான நாமக்கல் தகவல்படி, முட்டையின் பண்ணை விலை ஒரே மாதத்தில் 15% மற்றும் கடந்த ஆண்டை விட 40% அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பண்ணைக் கொள்முதல் விலையின்படி (நாமக்கல் மண்டலம்) ஒரு முட்டையின் விலை ரூ.6.80 ஆகும். சென்னை மற்றும் வெளிச்சந்தையின் ஒரு முட்டையின் விலை ரூ.7.50 முதல் ரூ.8.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் மாதம் முதல் கோழித் தீவனப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் பிராய்லர் கோழிக்கான தேவையும் அதிகமாக உள்ள நிலையில், தீவன விலை உயர்வு கறிக்கோழி விலையையும் பாதித்துள்ளது. சில்லறை விலையில் கறிக்கோழி (Skinless) ஒரு கிலோ 250 முதல் 260 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை நடப்பு ஆண்டில் பெருமளவு உயர்ந்துள்ளது.
கோழித் தீவனத்தில் சுமார் 55% மக்காச்சோளம் தான். மார்ச் மாதத்திலிருந்து இதன் விலை 35% க்கும் மேல் அதிகரித்துள்ளது. தீவனத்தில் 22% பயன்படுத்தப்படும் சோயாபீன்ஸின் விலை 64% க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், தீவனத்தில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய அமினோ அமிலங்களின் விலை மார்ச் மாதத்திலிருந்து மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.
மக்காச்சோளத்தின் தேவை கோழிப்பண்ணை துறைக்கு மட்டுமல்ல, எத்தனால் (Ethanol) தயாரிக்கும் நிறுவனங்களும் அதிக அளவில் மக்காச்சோளத்தை வாங்குவதால், சந்தையில் இதன் விலை உயர்கிறது. இதற்கிடையில், கடந்த ஒரு வருடமாக நிலவும் ஒழுங்கற்ற பருவமழை, விவசாயிகள் மற்றும் தொழில் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது காரிஃப் மற்றும் ரபி பயிர்களின் உற்பத்தியைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு சோயாபீன்ஸ் உற்பத்தி குறைவாக இருந்ததும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணம். தொழில் துறை தகவல்களின்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் சோயாபீன்ஸ் உற்பத்தி சுமார் 20% குறைவாக இருந்தது. இந்த ஆண்டு பருவமழை பலவீனமாக இருந்தால், உற்பத்தி மேலும் குறைந்து, விலை இன்னும் உயரக்கூடும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீடித்த கடுமையான வெப்ப அலை, முட்டைகளை மட்டுமல்ல, கோழிகளையும் பாதித்துள்ளது. அதிக வெப்பத்தால் பிராய்லர் கோழிகளின் உற்பத்தி குறைந்ததால், சந்தையில் கோழி இறைச்சி விலை உயர்ந்துள்ளது. பல நகரங்களில் கோழி இறைச்சியின் சில்லறை விலை கிலோவுக்கு 250 முதல் 260 ரூபாய் வரை எட்டியுள்ளது.
விலை எப்போது குறையும்?
வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து முட்டை விலை சற்று குறையும் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் ஆடி மாதம் தொடங்க உள்ளதாலும், வட மாநிலங்களில் ஸ்ராவண மாதம் தொடங்குவதாலும் ஆன்மீகக் காரணங்களுக்காகப் பலரும் முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுவதைக் குறைப்பார்கள்.
இதனால் சந்தையில் தேவை (Demand) குறைந்து, விலையும் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், பருவமழை சரியாக இல்லாவிட்டால், தீவன விலை குறையாது என்பதால் முட்டை விலை குறைவதும் கடினம் தான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.