இந்த இரண்டு கட்சிகளை மட்டும் விமர்சனம் செய்யுங்கள்.! நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட எடப்பாடி

First Published | Nov 6, 2024, 1:13 PM IST

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. புதிய கூட்டணி உருவாக்கம் மற்றும் உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுகவும் தொடர் தோல்விகளும்

தமிழகத்தில் 10 ஆண்டுகள் அசைக்க முடியாத ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தலைமை அதிகாரத்தை பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியால் பல பிளவுகளாக பிரிந்துள்ளது. இதன் காரணமாக வாக்குகள் சிதறி எதிர்த்து போட்டியிடக்கூடிய கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இணைந்து தேர்தலை எதிர்கொண்டனர். அப்போது ஏற்பட்ட தோல்வியால் ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் இழந்தது

தொடர் தோல்வியால் விரக்தி

இதனையடுத்து இரட்டை தலைமையால் கட்சியின் முடிவை ஒருமித்து எடுக்க முடியவில்லை எனக்கூறி மீண்டும் ஒற்றை தலைமை முழக்கம் எழுந்தது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தர்ம யுத்தம் தொடங்கினார். இதனால் ஏற்பட்ட மோதல் இன்னும் குறையவில்லை. அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்விகளை சந்திக்க நேரிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்த அதிமுக 3வது 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனவே வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் அதிமுகவின் வாழ்வா.? சாவா என்ற நிலையில் உள்ளது. 

Tap to resize

தவெகவுடன் கூட்டணி.?

எனவே வருகிற 2026ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தற்போதே தாயாராகி வருகிறது. மிகப்பெரிய கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது. எனவே 2026ஆம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கி தமிழக வெற்றிக்கழகத்தோடு கூட்டணி அமைக்க மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2022 ஆம் ஆண்டு அதிமுக உட்கட்சித்  தேர்தல் நடைபெற்ற நிலையில் அதனுடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே மீண்டும் உட்கட்சித் தேர்தலை நடத்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக, பாஜகவை மட்டும் விமர்சியுங்கள்

2022 ஆம் உட்கட்சி தேர்தல் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகியோர் ஒன்றாக இணைந்திருந்த காலத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது இ.பி.எஸ் தலைமையில் மட்டும் நடத்த ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தீவிரமாக கட்சி பணிகளை மேற்கொள்ளவும் தேர்தலுக்கு தயாராகவும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.  திமுக மற்றும் பாஜகவை தவிர மற்ற கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என மாவட்ட செயலாளர் கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது உள்ள நிலையில் கூட்டணியானது மாறலாம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos

click me!