தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய “அவரும் நானும் பாகம் 2” புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்த நிலையில் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. மாறாக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
24
தளபதியும் நானும் டூ அவரும் நானும்
நிகழ்ச்சியில் பேசிய துர்கா ஸ்டாலின். “நான் எழுதிய தொடரின் முதல் புத்தகம் கடந்த 2010ம் ஆண்டு தளபதியும், நானும் என்று தான் வெளி வந்தது. பின்னர் எனது கணவர் தான் அவரும் நானும் என்று பெயர் மாற்றம் செய்தார். தொடரை படித்துவிட்டு எனது அத்தையும், அம்மாவும் என்னைப் பாராட்டினார்கள். தற்போது வரமுடியாத சூழல். அவர்களது ஆசி எனக்கு எப்போதும் இருக்கும்.
34
துணைமுதல்வர் அவர்களே...
தமிழகத்தின் முதல்வராகவும், கட்சியின் தலைவராகவும் பல்வேறு பணிகள் இருந்தாலும் தனக்கு கிடைத்த நேரத்தில் எனது புத்தகத்தை முழுவதும் படித்து எனக்கு சில ஆலோசனைகளும் வழங்கி நூலுக்கு அன்பு உரையும் எழுதி கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவரால் வரமுடியாவிட்டாலும் அவர் மனம் முழுக்க இங்கு தான் இருக்கும். நேரலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் எனது கணவருக்கு நன்றி. புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள தங்கள் பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி இங்கு வந்த துணை முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டதும் அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது.
2020ம் ஆண்டுக்கு பிறகான, குறிப்பாக எனது கணவர் முதல்வரான பிறகான நிகழ்வுகளை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு வெளியிட்டுருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக துணைமுதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “என்னுடைய தாயார் அவர்கள் எழுதியுள்ள ‘அவரும் நானும் பாகம்-2’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் இன்று பங்கேற்றோம். அரசியலிலும், குடும்பத்திலும் கழகத்தலைவர் - நம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களோடு அன்னையார் எதிர்கொண்ட சூழல்கள் - அனுபவங்களை மீண்டும் நூலாக்கியுள்ளார்கள். இப்புத்தகம் எல்லோரிடமும் சென்று சேரட்டும்! எழுத்தாளராக இரண்டாவது நூலை கொண்டு வந்திருக்கும் அன்னையாருக்கு என் அன்பு வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.