Tamilaga Vetri Kalagam: அமைச்சர் நேருவின் தம்பி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமா என தமிழக வெற்றிக்கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் இந்தாண்டு பணி நியமனங்கள் செய்யப்பட்டன. இதற்காக அண்ணா பல்கலை சார்பில் எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்தாண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த பணி நியமனத்தில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது அமலாக்கத்துறையால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலினின் ஊழல் மாடல் அரசு அமலாக்கத் துறையின் கடிதத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? மாநில உரிமை என்ற உருட்டுகளை விரித்து தன் ஊழலை மூடி மறைப்பாரா? அல்லது தைரியமாக வழக்குப் பதிவு செய்து விசாரிப்பாரா? என தவெக கேள்வி எழுப்பியுள்ளது.
25
தமிழக வெற்றிக் கழகம்
இதுதொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர், ஓட்டுனர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி தகுதியானவர்கள் பலர் இருந்தாலும், லஞ்சம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளித்ததால்... தகுதி வாய்ந்த பல்வேறு இளைஞர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியானது. இது குறித்த வழக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடந்து கொண்டிருக்கும் நிலையில், தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மறுத்து, பணம் கொடுத்தவர்களுக்கே வேலை என்ற லஞ்ச வேட்டை, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ‘தகிடு தத்த மாடல்’ அரசின் இன்னொரு முக்கிய துறையிலும் அரங்கேறி இருக்கிறது.
35
25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கையால் பணி ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், இதில் சுமார் 150 பணியிடங்களுக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்க பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தாகவும் கூறியுள்ளது அமலாக்கத் துறை.
ஏற்கனவே தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பறித்த செந்தில்பாலாஜியை உச்சி முகர்ந்து மெச்சிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின்… இப்போது அதே வழியில் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் லஞ்சம் கொடுத்தவர்களுக்கே வேலை என்று செயல்பட்டிருக்கிற கே.என்.நேரு அவர்களையும் உச்சி முகர்வாரா? ஸ்டாலினின் ஊழல் மாடல் அரசு அமலாக்கத் துறையின் கடிதத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? மாநில உரிமை என்ற உருட்டுகளை விரித்து தன் ஊழலை மூடி மறைப்பாரா? அல்லது தைரியமாக வழக்குப் பதிவு செய்து விசாரிப்பாரா?
55
எப்போது FIR பதிவு செய்வார்கள்
தமிழக காவல்துறை இவ்வழக்கில் எப்போது FIR பதிவு செய்வார்கள்? அவ்வாறு பதிவு செய்தாலும் தகுந்த குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படுமா? தமிழக மக்கள் விழிப்போடு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே என தெரிவித்துள்ளார்.