Mk Stalin Met CP Radhakrishnan | தமிழகத்திற்கு வருகை தந்த குடியரசு துணைத்தலைவர் சிபி ராதாகிருஷணனை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற திருப்பூரைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முதல் முறையாக தமிழகத்திற்கு வருகை தந்தார். தமிழகம் வந்த ராதாகிருஷ்ணனுக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
24
மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்
இதனைத் தொடர்ந்து புதன் கிழமை மதுரை வந்த ராதாகிருஷ்ணன் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது கோவில் மாசி வீதியில் குவிந்திருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
34
ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.பி.கனிமொழி, மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள திரு. சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்!” என்று குறிப்பிட்டுள்ளார்.