
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 30ம் தேதி தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வெள்ளிச்சந்தையில் நடைபெற்றது.
தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்
இதில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராக விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும், தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ்
பொருளாளராகவும், அவைத்தலைவராக மருத்துவர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து விலகி கொள்கிறேன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு நல்லதம்பி பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி பரபரப்பு கடிதம்
அதில், தேமுதிக பொதுச் செயலாளர் அவர்களுக்கு ஒரு தொண்டனின் கடிதம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டிருக்கும் எங்களின் குடும்பத் தலைவர் கேப்டன் அவர்களை வணங்கி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் மக்கள் தலைவி அண்ணியார் அவர்களுக்கு வணக்கத்துடன் எழுதிக் கொள்வது. கழகத்தின் உண்மை விசுவாசி ஆகிய நான் கழகத் தலைவர் அன்புத் தலைவர் கேப்டனால் உருவாக்கப்பட்டவன். நான் என்றென்றும் அன்புத் தலைவர் கேப்டன் அவர்களுக்காக, கேப்டன் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் என்றும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய பிரபாகரன் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும்
விஜய பிரபாகரன் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். நான் மக்கள் மன்றத்திலும் கழகத்திலும் என்னால் முடித்தவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பான முறையில் தங்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் இயக்கத்திற்காகவும் கேப்டனின் குடும்பத்திற்காகவும் என்னால் முடிந்த வரை செயல்பட்டு வருகிறேன். மேலும் தருமபுரியில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த கேப்டன் அவர்களின் மறு உருவமும் கேப்டனின் நிழலாகவும் இருக்கின்ற அன்புத்தம்பி இளைய கேப்டன் விஜய பிரபாகரன் அவர்களுக்கு கழக இளைஞரணி செயலாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தம்பியின் குரல், தமிழக சட்டப் பேரவையில் கழகத் தலைவர் கேப்டனின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன்.
ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்
எனவே எங்களின் காவல் தெய்வம் அண்ணி பிரேமலதா அவர்களின் கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்திலிருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை. என்றைக்கும் நான் கழகத்தின் கடைகோடி தொண்டன் என்பதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொண்டு கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களுக்கும், கழக பொருளாளர் தளபதி அண்ணன் எல்.கே. சுதீஷ் அவர்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுவிக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன்
எனவே கழக பொதுச் செயலாளர் அண்ணியார், கடந்த 30ம் தேதியன்று வெளியிட்ட கழக அறிவிப்பில் எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அப்படி விடுவிக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மன வருத்தத்திலும் கூறவில்லை மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.