தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் தான் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக உள்ளனர். எனவே ஆசிரியர் இல்லையென்றால் மாணவர்களின் கல்வி பெரும் அளவில் பாதிக்கப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் சுமார் 4,500 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லையெனவும், மேலும் 19,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் ஒன்று கூறப்படுகிறது.
ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், இன்று சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
24
ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு
மேலும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊரை விட்டு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று பணிபுரிந்து வருகிறார்கள். எனவே தங்களது சொந்த ஊரில் அல்லது சொந்த மாவட்டத்தில் பணிபுரிய விருப்பப்பட்டு பணியிட மாறுதல் கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு இந்தாண்டிற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 7 முதல் 11 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டத்திற்குள் ஜூலை 25 ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 26, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் பள்ளிகல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34
மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல்
இதனிடையே ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக பழங்குடியினர் நல இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி , நடுநிலைப்பள்ளி , ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர். உடற்கல்வி இயக்குநர் , உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு
மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு 09.07.2025 அன்று காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம்/ பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.