தமிழகத்தில் வெளிச்சந்தையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் நோக்கில், நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் பல்பொருள் மற்றும் கூட்டுறவு மொத்த பண்டகசாலைகள் மூலம் பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன. சுய சேவை முறையில் இயங்கும் இந்த அங்காடிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன. இவை நீண்ட காலமாக குறைந்த விலையில் மக்களுக்குப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 300க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில், பல்வேறு தனியார் நிறுவனங்கள், மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் பெரிய ஸ்டோர்களை நடத்தி வருகின்றன. அதற்கு போட்டியாக கூட்டுறவுத்துறையும், அமுதமும், வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனை செய்யும் வகையில் மாவட்ட வாரியாக பெரிய அளவில் மெகா ஸ்டோரை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெரிய ஸ்டோர் திறந்து, அங்கு கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள், மகளிர் சுய உதவி குழு தயாரிக்கும் பொருட்கள், மலைவாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் அன்றாடம் தேவைப்படும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு கடைகள் இந்த மெகா ஸ்டோருடன் ஒருங்கிணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.