Marxist Communist Conference in Madurai : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் மதுரை வந்துள்ளனர்.
மாநாட்டிற்காக மதுரையின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக சிவப்புக் கொடிகளால் சூழப்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன, இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள பணிகள், எதிர்கொண்ட சவால்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் வரலாற்றில் நேரிட்ட திருப்புமுனைகள் உள்ளிட்டவை புகைப்படங்களாக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
சிபிஎம் மாநாடு முக்கிய நிகழ்வுகள் என்ன.?
இதனையடுத்து மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை 8 மணியளவில் தியாகிகள் நினைவு செங்கொடி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்ட மூத்த தலைவர் பங்கேற்றுள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு தொடங்கியது. மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார், தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டவர்கள் பங்கெடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று மாலையில் திரைப்பட இயக்குநர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
சிபிஎம் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
நாளையதினம் நடக்கும் மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டு உரை நிகழ்த்துகிறார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா காங்கிரஸ் கட்சி சார்பாக அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.
இதனையடுத்து வருகிற 6ஆம் தேதி இறுதி நாளில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி உடல் நிலை பாதிப்பால் இறந்த நிலையில் அந்த பொறுப்பு புதிய செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் தேர்வு
சிபிஎம் பொலிட்பீரோவிற்கு கே கே சைலஜா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு பெண் உறுப்பினர்களான பிருந்தாக்காரத் மற்றும் சுபாஷினி அலி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக சைலஜாவிற்கு வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் சைலஜா உடன் கே ராதாகிருஷ்ணன், தாமஸ் ஐசக், ஜெயராஜன் ஆகியோரும் பொலிட்பீரோவிற்கு போட்டியிட உள்ளனர்