தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதனால் மோதல் வலுத்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4 வருடங்கள் முடிவடைந்து 5ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இன்னும் 8 முதல் 9 மாதங்களில் தமிழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. எனவே தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியானது பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
தற்போது வரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மநீம, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளோடு இன்னும் சில கட்சிகள் இணைந்துள்ளது. அதே நேரம் அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக மட்டுமே கூட்டணியை உறுதி செய்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை முறித்துக்கொண்டது.
24
அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி
தற்போது திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்க திட்டமிட்டது. இதற்காக பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. எனவே வரும் நாட்களில் பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட மேலும் ஒரு சில கட்சிகள் இணையும் என கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்சியில் பாஜகவும் பங்கேற்கும் என்று கூறியுள்ளார். ஆனால் இதனை அதிமுக மறுத்து வருகிறது. இதற்கு பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறவில்லை, எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் கூறினார்" என விளக்கமளித்துள்ளார்.
34
கூட்டணி ஆட்சி- அமித்ஷா உறுதி
ஆனால் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி ஆட்சி குறித்த கருத்தை ஆதரித்து, "மூன்று முறை அமித்ஷா தெளிவாகக் கூறிவிட்டார், இதில் மாற்றுக் கருத்து இருந்தால் அதிமுக அவரிடம் பேசலாம்" என்று கூறியுள்ளார். இதனிடையே தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேதாரண்யத்தில் சுற்றுப்பயணத்தின்போது, பாஜகவுடனான கூட்டணி குறித்து பேசினார். "ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி இல்லை,
கூட்டணி குறித்து அதிமுகவிற்கு எந்த கவலையும் இல்லை; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்" என்று திட்டவட்டமாகக் கூறினார். இதனால் அதிமுக- பாஜக இடையே மோதல் வலுத்தது. எனவே தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆட்சியில் பங்கு கொடுக்க ஏமாளி இல்லையென்ற பேச்சு தொடர்பாக ஆலோசித்துள்ளார். அண்ணன் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசினேன். `கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்றும் ஏமாளிகள் அல்ல'ன்னு அவர் பேசுனதுல எந்த உள் நோக்கமும் இல்லைன்னு சொன்னார்." என நயினார் விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள், பாஜகவினர் அதிமுகவை கபளீகரம் செய்துவிடுவார்கள் என திமுகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கு தான் ஏமாளி இல்லையேன எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவ்வாறு பதில் அளித்துள்ளார். அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லையென நயினார் நாகேந்திரன் கூட்டணிக்குள் சாமாதானம் செய்யும் வகையில் பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.