வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில், பேரூராட்சி பெண் தலைவர் கீதா தனது கணவருக்கும் பரிவட்டம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது
தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த ஆறாம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கமாக இந்த தேரோட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வீரபாண்டி பேரூராட்சி பெண் தலைவரான திமுகவைச் சேர்ந்த கீதா என்பவருக்கு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நாராயணி மாலை அணிவித்து பரிவட்டம் சூட்டினார்.
24
பேரூராட்சி தலைவரின் கணவருக்கு பரிவட்டம்
இதனைத் தொடர்ந்து தனது கணவர் சசி என்பவருக்கும் பரிவட்டம் கட்ட வேண்டும் என்று பேரூராட்சி திமுக பெண் தலைவர் கீதா வேண்டுகோள் விடுத்தார். இது அரசு நிகழ்ச்சி என்பதால் அரசு பதவிகளில் இல்லாதவருக்கு பரிவட்டம் கட்ட முடியாது என்று கூறியதால் கீதா கொந்தளித்தார். அருகில் நின்றிருந்த அவரது கணவர் சசி "இரண்டு லட்ச ரூபாய் ரொக்கமாக கொடுத்துள்ளேன்" எனக்கு பரிவட்டம் கட்ட மாட்டீர்களா? என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எதிரிலேயே பரிவட்டம் கட்டிக் கொண்டிருந்த அர்ச்சகர்களிடம் கொந்தளித்தார்.
34
அறநிலையத்துறை அதிகாரிகளோடு மோதல்
இதனால் வேறு வழி இன்றி அவரை சமாதானப்படுத்திய அர்ச்சகர்கள் அவருக்கும் மாலை அணிவித்து பரிவட்டம் சூட்டினார்கள். தேரோட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு அடியாட்களுடன் சென்ற பேரூராட்சி பெண் தலைவர் கீதா, அவரது கணவர் சசி ஆகியோர் அறநிலையத்துறை அதிகாரிகளை ஆபாசமாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது.
அறநிலையத்துறை செயல் அலுவலர் நாராயணி பேரூராட்சி தலைவர் கீதா அவரது கணவர் சசி உள்ளிட்டோர் மீது வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நாராயணி அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யக் கூடாது என திமுக தலைமையில் இருந்து காவல்துறைக்கு அதிக அழுத்தம் கொடுத்தாக கூறப்படுகிறது.
பேரூராட்சி தலைவர் கீதா மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து வேறு வழியில்லாமல், வீரபாண்டி காவல்துறையினர்,தாக்குதல் நடத்தப்பட்டதை மறைத்து,பேரூராட்சி தலைவர் கீதா மற்றும் அவரது கணவர் சசி உள்ளிட்ட சிலர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசியதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக பேரூராட்சி பெண் தலைவர் கீதா ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளராக பதவியில் உள்ள நிலையில், அவரது கணவர் சசி கட்சிப் பதவியில் கூட இல்லை.எந்த அடிப்படையில் அவருக்கு அரசு நிகழ்ச்சியில் பரிவட்டம் கட்டப்பட்டது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.