கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். சேலம் வந்தடைந்த அவரது வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இவர் சேலத்தில் இருந்து கோவை வந்த அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சரும் உடுமலை தொகுதியின் எம்எல்ஏவுமான உடுமலை ராதாகிருஷ்ணனின் இல்ல காதணி விழா விமர்சியாக நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வாழ்த்தினார்.
24
எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன்
அதே சமயம் இந்த விழாவில் கலந்துகொள்ள பாஜக தலைவர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, இந்த விழாவில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமியும் நயினார் நாகேந்திரனும் அருகருகே நின்று குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
34
வெடிகுண்டு மிரட்டல்
பின்னர் கோவையில் இருந்து நேற்று மாலை 7 மணி அளவில் சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் வந்தது. உடனே இதுதொடர்பாக சேலம் மாநகர காவல் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி வீடு மற்றும் கார் ஷெட் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்றும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இதேபோன்று சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.