ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்புள்ளது எனக் கூறி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஐகோர்ட்டில் மனு தாக்கல்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை மாதம் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 27 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
24
ஏ1 குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு
இந்த வழக்கு விசாரணையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையில் சிபிஐ விசாரணை உத்தரவுக்கு தடை இல்லை எனவும் நீதிபதிகள் கூறினர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 ரவுடியான நாகேந்திரன் உடல்நல குறைவால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து அவருடைய மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
34
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி
அதேபோல் இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சிறையில் உள்ள சிவா, சதீஷ் மனுத்தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.இந்நிலையில் சிவா, சதீஷுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனது கணவர் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் வழங்குவதால் வழக்கு விசாரணை நீர்த்துப் போய்விடும், சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.