திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசனின் புதுமனை புகுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றினார். அவருக்கு வழிநெடுகிலும் பேனர் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் வழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு , திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் கலந்து கொண்டனர்.
24
அமைச்சர் எ.வ.வேலுக்கு வரவேற்பு
இந்த நிகழ்வில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்புதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு வழங்கப்பட்ட மரியாதையை விட அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மயில் மாலை, 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றார். அவரது காலில் விழுந்தும் ஆசிர்வாதம் வாங்கினார். மேலும் அவரது குடும்பத்தினருடன் நின்று அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட திமுக நிர்வாகிகள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
34
வைரலான வீடியோ
இதுதொடர்பான வீடியோ வைரலானது. அதுமட்டுமல்லாமல் பாரதிதாசன் தவெக நிர்வாகியா அல்லது திமுக நிர்வாகியா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் தன் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்த அமைச்சர் எ.வ.வேலுவிற்கு பண மாலை போட்டு வரவேற்பு அளித்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் விஜய்க்கு மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இனிவரும் காலங்களில் என் சம்மந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் எதிரி திமுக தான் கூறியது மட்டுமல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளில் திமுக அரசையும், அமைச்சரையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் மாவட்ட செயலாளரின் இந்த செயல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.