
ஜெயலலிதா மறைவும்- அதிமுக உட்கட்சி மோதலும்
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் பலவித உட்கட்சி மோதல்கள் அதிகரித்துள்ளது. நீயா நானா என்ற போட்டியில் மூத்த தலைவர்கள் தனித்தனியாக பிரிந்து சென்றுள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து கடந்த 8 வருடமாக அதிமுகவிற்கு தொடர் தோல்விகளே கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த போதிலும் தேர்தலில் வெற்றிகள் கிடைக்கவில்லை. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இந்த நிலையில் அதிமுக ஓட்டுக்களை கவர பாஜக திட்டம் தீட்டி வருகிறது. அதன் படி அதிமுக நிறுவனரான எம்ஜிஆர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து புகழ்ந்து வருகிறார்.
மக்களின் முன்னேற்றத்தில் எம்ஜிஆர்
அந்த வகையில் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்கவியலாத பெயர்களில் அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் முக்கியமானது. மூன்று முறை தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்தும், தான், தனது குடும்பம் என்று எண்ணாமல், தமிழக மக்களுக்காக உழைத்தவர்.
பெருந்தலைவர் காமராஜரைப் போலவே, நேர்மையும் நுண்ணறிவும் கொண்ட தலைவராக விளங்கியவர் அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள். எப்படி தமது திரைப்படங்களில், விவசாயியாக, மாடு மேய்ப்பவராக, ரிக்ஷாகாரராக, குதிரை வண்டி இழுப்பவராக, மீனவராக என மொத்தத்தில் ஒரு சாமானிய மனிதராக, எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் லட்சியவாதியாக அமரர் எம்.ஜி.ஆர் இருந்தாரோ,
வேலை வாய்ப்புகளை உருவாக்கிய எம்ஜிஆர்
பின்னாட்களில் அதிகாரத்திற்கு வந்ததும், சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார். ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் பலவற்றை நிறுவி, சுகாதாரத்தில் கவனம் செலுத்தியது, பொதுச் சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்தியது, பல்வேறு தொழில்கள் மற்றும் தொழில் பயிற்சி திட்டங்கள் உட்பட, சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது,
கிராமப்புறங்களில் புதிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவி, கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்தியது. முதியோர் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் என, ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர்.
தலைசிறந்த தேசியவாதி எம்ஜிஆர்
டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், சமூக நலன், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் அர்ப்பணிப்புடன் இருந்தது, அவரது நலத்திட்டங்களும், தொடர் முயற்சிகளும், தமிழகத்தின் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றியது. தலைசிறந்த தேசியவாதியான டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, மிகுந்த மரியாதை இருக்கிறது. அதனை வெளிப்படுத்த அவர் தயங்கியது இல்லை.
மோடிக்கும் எம்ஜிஆருக்கும் ஒற்றுமை
டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்குமிடையே, பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தங்கள் நேர்மையாலும், கடின உழைப்பாலும், பொதுமக்கள் மீது கொண்ட அன்பாலும், உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள். தாங்கள் பட்ட துயரங்கள், வருங்கால சந்ததியினருக்கும் வரக் கூடாது என்பதற்காக, தங்கள் அதிகாரத்தை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியவர்கள். அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தில் உள்ள, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்.
எம்ஜிஆர் ஒரு சகாப்தம்
மது பிரதமர் மோடி அவர்கள், நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களது உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் செயல்படுத்தி வருகிறார் என்பது பெருமைக்குரியது.
புகழ் பெற்ற சில தலைவர்களின் வாழ்க்கை, எந்த மறைமுக சூத்திரத்தையும் கொண்டிருப்பதில்லை. பொதுமக்களின் மீது கொண்ட அன்பு, சமூகத்தின் மீது கொண்ட அக்கறை என்ற ஒரே கலவைதான். அந்த வகையில், ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை, ஒரு சகாப்தம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.