சிங்கப்பூர் துபாயில் இருந்து கோவை விமான நிலையம் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூபாய் 1.15 கோடி மதிப்புள்ள உயர்ரக ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொழில் நகரமான கோவைக்கு பணி நிமித்தம் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு ஒரு சில இடங்களில் இருந்து நேரடியாக விமான சேவை இல்லாததால், கேரளாவைச் சேர்ந்த பயணிகள் கோவை விமான நிலையம் வந்து செல்வது வழக்கமாகும்.
24
அவ்வப்போது அரிய வகை விலங்குகள் பறிமுதல்
அதேபோல், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் கோவை வழியாக மீண்டும் நாடு திரும்புவதும் வழக்கமாகும். அவ்வாறு சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்கம், அரிய வகை விலங்குகள், பறவைகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
34
சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை
இதனால், சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு போலீசார் அவ்வப்போது விமான நிலையத்தில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சிங்கப்பூர் மற்றும் துபாய் நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது நடந்த சோதனையில் பயணிகள் இருவரிடம் இருந்து (DJI Air 3S, Mini 4 Pro, Mavic 3 Pro, Avata 2, DJI Flip ) ரூபாய் 1.15 கோடி மதிப்புள்ளான உயர்ரக ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.