தமிழ்நாட்டில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக வீட்டு பயன்பாடுக்கு 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடன், உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நிகழாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்தவும், மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாயின.
24
சென்னை வீட்டுக்கு ரூ.91,993 மின் கட்டணம்
இதனால் மீண்டும் மின் கட்டணம் உயருமா? என பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் இருந்து வரும் நிலையில், சென்னை அம்பத்தூரில் ஒரு வீட்டுக்கு ரூ.91,993 மின் கட்டணம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் திருவள்ளீஸ்வரர் நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது வீட்டில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சராசரியாக 450 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சராசரியாக 2 மாதத்துக்கு ஒருமுறை ரூ.1,500 முதல் ரூ.2.000 வரை மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
34
மின்கட்டணத்தை பார்த்து குடும்பத்தினர் ஷாக்
இந்நிலையில், நந்தகுமார் வீட்டில் ஜூலை மாத கணக்கீட்டின்படி 8,370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக 91,993 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இதைப் பார்த்ததும் நந்தகுமாரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். உடனடியாக இது தொடர்பாக சென்னை அண்ணாநகர் மேற்கு 11வது மெயின் ரோட்டில் உள்ள மின் வாரிய அலுவலக அதிகாரிகளிடம் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி தவறுக்கான காரணம் கண்டறியப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
MRT மீட்டர் ரீடிங் மீண்டும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் இப்படி வீட்டுக்கு அதிகப்படியான மின் கட்டணங்கள் பதிவாகி வருகின்றன. மீட்டர் ரீடிங்கில் உள்ள பிழை காரணமாக இந்த தவறு நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.