பெங்களூருவில் கிரிக்கெட் மட்டுமின்றி கால்பந்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ கண்டீரவா மைதானம் கால்பந்து போட்டிகளை நடத்த தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஹைடெக் நகரமான பெங்களூரு இப்போது விளையாட்டில் அடுத்தடுத்து பெரும் அடியை சந்தித்துள்ளது. அடுத்த மாதம் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்க்கான போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் இந்த போட்டியை நடத்துவதில் இருந்து கைவிடப்பட்டது. பெங்களூருவில் நடக்கவிருந்த போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டன. இந்த அதிர்ச்சியில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் மீளாத நிலையில், கால்பந்து ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி வந்துள்ளது.
25
ஸ்ரீ கண்டீரவா மைதானமும் தகுதியற்றதாக அறிவிப்பு
அதாவது பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானமும் இந்தியாவின் AFC ஆசிய கோப்பை 2027 தகுதிச் சுற்றுப் போட்டியை நடத்த தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) அக்டோபர் 14 அன்று சிங்கப்பூருக்கு எதிரான இந்தியாவின் போட்டியை கண்டீரவாவில் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஆய்வுக்குப் பிறகு அனுமதியை மறுத்துவிட்டது, இதனால் AIFF கோவா மற்றும் ஷில்லாங்கில் மாற்று இடங்களைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
35
AFC ஆசிய கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளை நடத்த முடியாது
இது தொடர்பாக கர்நாடக மாநில கால்பந்து சம்மேளன துணைச் செயலாளரும் முன்னாள் சர்வதேச கால்பந்து வீரருமான அஸ்லம் கான் ஆசியநெட்டிடம் கூறுகையில், “ஸ்ரீ கண்டீரவா மைதானம் தற்போது மாநில அரசால் பராமரிக்கப்படுகிறது. இருப்பினும், மைதானத்தில் முன் அனுமதிகள் மற்றும் அட்டவணை முரண்பாடுகள் காரணமாக 2027 AFC ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகளை இங்கு நடத்த முடியாது என்று அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் SAFF கோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்'' என்றார்.
பெரிய அளவிலான கால்பந்து போட்டிகளை நடத்திய ஸ்ரீ கண்டீரவா மைதானம் இந்தியாவின் மிகப்பெரிய கால்பந்து போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களுக்கு மட்டுமின்றி பெங்களூரு விளையாட்டுத் துறைக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. AFC போட்டி ஆணையர் ஸ்ரீ கண்டீரவா மைதானம் குறித்து பல கவலைகளை எழுப்பியதாக ஒரு மூத்த AIFF அதிகாரி தெரிவித்தார்.
மைதானம் நல்ல நிலையில் இல்லை
“மைதானம் நல்ல நிலையில் இல்லை, மேலும் பல காரணிகள் சர்வதேச போட்டியை நடத்துவதற்கு சாதகமாக இல்லை” என்று அந்த அதிகாரி அறிக்கையில் கூறியிருக்கிறார். பெங்களூரு FC செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருப்பதால், உயர்மட்ட போட்டிகளுக்கான மைதான பராமரிப்பை கிளப் இனிமேல் நிர்வகிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய கால்பந்திற்கு, இந்த நிராகரிப்பு மிகவும் வேதனையாக அமைந்துள்ளது.
55
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தால் வந்த வினை
ஐபில் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆர்சிபி அணியினருக்கு சின்னசாமி மைதானத்தில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்கு தகுதியற்றது என அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் காரணமாக, கர்நாடக அரசு பெங்களூருவின் புற நகரில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டுவது குறித்து பரிசீலித்து வருகிறது.