Published : Aug 24, 2025, 11:36 AM ISTUpdated : Aug 24, 2025, 12:05 PM IST
டிராவிட்டுக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச்சுவராக விளங்கி வந்த சேதேஷ்வர் புஜாரா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
Cheteshwar Pujara Retires From All forms Of Cricket
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சேதேஷ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய ஜெர்சியை அணிவது, தேசிய கீதம் பாடுவது, ஒவ்வொரு முறையும் மைதானத்தில் கால் பதிக்கும்போது தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அனுபவம் என்று அவர் வெளியிட்ட ஒரு உணர்ச்சிபூர்வமான அறிக்கையில் கூறியுள்ளார்.
25
இந்திய அணியில் கால் பதிக்கும் கனவு நனவானது
37 வயதான புஜரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில்''ராஜ்கோட் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனாக, என் பெற்றோருடன். நட்சத்திரங்களை இலக்காகக் கொண்டு நான் புறப்பட்டேன். இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டேன். இந்த விளையாட்டு எனக்கு இவ்வளவு விலைமதிப்பற்ற வாய்ப்புகளைத் தரும் என்று அப்போது எனக்குத் தெரியாது. அனுபவங்கள், நோக்கம், அன்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக எனது மாநிலத்தையும் இந்த சிறந்த தேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது.
35
அணி வீரர்கள், ரசிகர்களுக்கு நன்றி
மிகுந்த நன்றியுடன் நான் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் வாய்ப்பு மற்றும் ஆதரவிற்காக BCCI மற்றும் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது அணி வீரர்கள், துணை ஊழியர்கள், எனது வழிகாட்டிகள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி''என்று தெரிவித்துள்ளார். இதேபோல் தனக்கு மிகுந்த ஆதரவும், வரவேற்பும் அளித்த ரசிகர்களுக்கு என்று நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட்டுக்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தடுப்புச் சுவர் என அழைக்கப்பட்டவர் புஜாரா. தனது பொறுமையான ஆட்டத்தின் மூலம் எதிரணி பவுலர்களை சோர்வடையச் செய்து பல்வேறு இக்கட்டான நிலையில் இருந்து அணியை மீட்டு வெற்றி பெறச் செய்துள்ளார். 2018-19ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை முதன்முதலில் வென்றனர். அப்போது இந்திய அணியின் முதுகெலும்பாக விளங்கிய புஜாரா, அந்த தொடரில் 521 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றார்.
55
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் எத்தனை ரன்கள்?
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த புஜாரா, 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்கள் எடுத்துள்ளார். 19 சதங்கள் விளாசியுள்ளார். 35 அரை சதங்கள் அடித்துள்ளார். புஜ்ரா கடைசியாக 2023ம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தான் விளையாடினார். அதன்பிறகு இளம் வீரர்கள் வருகை உள்ளிட்ட காரணங்களால் அவரால் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.
வயதாகி விட்டதால் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்கு பிறகு முழு நேரமாக வர்ணனணை பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட் இடத்தை புஜாரா ஓரளவு பூர்த்தி செய்தார். ஆனால் புஜாராவின் இடத்தை இப்போதைய இளம் வீரர்கள் பூர்த்தி செய்வது கடினம் என்பதே மறுக்க முடியாத உண்மை.