
கோ கோ உலகக் கோப்பை
உலக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 'கோ கோ உலகக் கோப்பை 2025' தொடர் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் இன்று (ஜனவரி 13) தொடங்குகிறது. வரும் 19ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்தியா உள்பட 39 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்ள இருக்கின்றன.
இந்திய ஆண்கள் அணி பிரதிக் வைக்கர் தலைமையிலும், இந்திய பெண்கள் அணி பிரியங்கா இங்கிள் தலைமையிலும் களமிறங்குகிறது. கோ கோ விளையாட்டை உலகளவில் எடுத்துச் சென்று சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக மாற்றுவதே இந்த உலகக்கோப்பை தொடரின் முக்கிய நோக்கமாகும்.
இந்தியா-நேபாளம் மோதல்
கோ கோ உலகக்கோப்பை தொடர் இன்று (ஜனவரி 13) ஆண்கள் பிரிவில் இந்தியா மற்றும் நேபாள அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்க உள்ளது. பெண்கள் பிரிவில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய மகளிர் அணி ஜனவரி தென் கொரியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியை தொடங்க உள்ளது.
ஆண்கள் பிரிவில் 20 அணிகளும் மற்றும் பெண்கள் பிரிவில் 19 அணிகளும் கலந்து கொள்கின்றன. ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 20 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ஏ பிரிவில் நேபாளம், பெரு, பிரேசில் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடன் உள்ளது. லீக் போட்டிகள் ஜனவரி 16 வரை நடைபெறும், பிளே ஆஃப் போட்டிகள் ஜனவரி 17 அன்று தொடங்கும். இறுதிப் போட்டி ஜனவரி 19 அன்று நடைபெறும்.
மகளிர் பிரிவு
மகளிர் பிரிவில் 19 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா அணி ஏ பிரிவில் ஈரான், மலேசியா மற்றும் தென் கொரியாவுடன் உள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் மற்றும் இரண்டு சிறந்த மூன்றாவது இடத்தைப் பிடித்த அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
ஆண்கள் அணிகள்
குழு A: இந்தியா, நேபாளம், பெரு, பிரேசில், பூட்டான்
குழு B: தென்னாப்பிரிக்கா, கானா, அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஈரான்
குழு C: வங்காளதேசம், இலங்கை, கொரியக் குடியரசு, அமெரிக்கா, போலந்து
குழு D: இங்கிலாந்து, ஜெர்மனி, மலேசியா, ஆஸ்திரேலியா, கென்யா
மகளிர் அணிகள்
குழு A: இந்தியா, ஈரான், மலேசியா, கொரியக் குடியரசு
குழு B: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கென்யா, உகாண்டா, நெதர்லாந்து
குழு C: நேபாளம், பூட்டான், இலங்கை, ஜெர்மனி, வங்காளதேசம்
குழு D: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, போலந்து, பெரு, இந்தோனேஷியா
2025 கோ கோ உலகக் கோப்பை எப்போது தொடங்கும்?
கோ கோ உலகக் கோப்பை இன்று (ஜனவரி 13) தொடங்கி ஜனவரி 19 அன்று முடிவடையும்.
கோ கோ உலகக் கோப்பை எங்கு நடைபெறும்?
கோ கோ உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் தில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடைபெறும்.
இந்த உலகக் கோப்பையை இந்தியாவில் எந்த டிவி சேனல் ஒளிபரப்புகிறது?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் குழும சேனல்களில் கோ கோ உலகக் கோப்பை போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
மொபைல் மற்றும் லேப்டாப்பில் கோ கோ உலகக் கோப்பையை எப்படி பார்ப்பது?
கோ கோ உலகக் கோப்பை இந்தியாவில் Disney+ Hotstar செயலி மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்திய போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன?
இந்திய ஆண்கள் அணிக்கும், நேபாள ஆண்கள் அணிகளுக்கும் இடையிலான போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணி வீரர்கள்
முதல் போட்டியில் களத்தில் குதிக்கும் இந்திய, நேபாள அணிகள் வீரர்கள் விவரம் பின்வருமாறு:
இந்திய ஆண்கள் அணி: பிரதீக் வைக்கர் (கேப்டன்), பிரபாணி சாபர், மேஹுல், சச்சின் பார்கோ, சுயாஷ் கர்கேட், ராம்ஜி கஷ்யப், சிவா போதிர் ரெட்டி, ஆதித்யா கன்புலே, கௌதம் எம்கே, நிஹில் பி, ஆகாஷ் குமார், சுப்ரமணி, சுமன் பர்மன், அனிகேத் போடே, எஸ். ரோகேசன் சிங்
காத்திருப்பு வீரர்கள்: அக்ஷய் பங்காரே, ராஜவர்தன் சங்கர் பாட்டில், விஸ்வநாத் ஜானகிராம்.
நேபாள ஆண்கள் அணி: ஹேம்ராஜ் பனேரு (கேப்டன்), ஜனக் சந்த், சமீர் சந்த், பிஸ்வாஸ் சௌத்ரி, சூரஜ் புஜாரா, ரோஹித் குமார் வர்மா, யமன் பூரி, பெட் பகதூர் வாலி, ஜாலக் BK, பிக்ரால் சிங் ரத்கையா, பிஷால் தரு, ராஜன் பால், ஜோகேந்தர் ராணா, பாரத் சாரு, கணேஷ் பிஸ்வகர்மா.